×

கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க யார் உரிமை கொடுத்தது: குஜராத் போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: ஐந்து இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க குஜராத் போலீசாருக்கு யார் உரிமை கொடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. குஜராத் மாநிலம் உந்தேலா கிராமத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கேடா மாதர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஏ.வி.பர்மர், பிஎஸ்ஐ டி.பி. குமாவத், தலைமை காவலர் கே.எல் தாபி மற்றும் கான்ஸ்டபிள் ராஜு தாபி ஆகியோர் 5 இஸ்லாமியர்களை பிடித்து பொதுவெளியில் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கினர்.

இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கைதின்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி குஜராத் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், 4 காவல் துறை அதிகாரிகளுக்கு 14 நாள் சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 4 போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்டவர்களை பொதுவெளியில் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீசாருக்கு யார் உரிமை கொடுத்தது.

இதில், உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இதனால் 4 போலீசாரும் சிறைக்கு சென்று தண்டனை அனுபவிக்கட்டும்,’என்று நீதிபதிகள் கூறினர். போலீசார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘போலீசார் மீது ஏற்கனவே துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்கள் பற்றி தெரியாது. இந்த தண்டனைக்கு உயர் நீதிமன்றம் 3 மாதங்கள் தடை விதித்து இருப்பதால் இதற்கு உச்ச நீதிமன்றமும் தடைவிதிக்க வேண்டும்,’என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தண்டனைக்கு தடைவிதித்து மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க யார் உரிமை கொடுத்தது: குஜராத் போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Gujarat ,New Delhi ,Gujarat police ,Navratri ,Undela ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...